தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை – தேனியில் அதிகபட்சமாக 9 செ.மீ பதிவு
சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான 05-04-2026 (மாலை 2.00 மணி நிலவரப்படி) தினசரி வானிலை அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளத
Rain


சென்னை, 05 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான 05-04-2026 (மாலை 2.00 மணி நிலவரப்படி) தினசரி வானிலை அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளதாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் திருநெல்வேலி, கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது.

வெப்பநிலை நிலவரத்தைப் பொருத்தவரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை கணிசமாக குறைந்திருந்தது. மற்ற பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை. உள்தமிழகத்தில் சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2° செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 40.3° செல்சியஸ் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக சமவெளிப் பகுதிகளில் சேலத்தில் 23.1° செல்சியஸும், மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 11.7° செல்சியஸும் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ள முன்னறிவிப்பின்படி, ராயலசீமா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகத்தின் வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (05-04-2026) தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், தேனி மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை (06-04-2026) தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை தொடரக்கூடும். 07 முதல் 09ம் தேதி வரை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடையிடையே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டு, நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சம் 27° செல்சியஸ் அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ