Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 06 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியானது.
இந்நிலையில், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. மனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகிறது.
இதனிடையே, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 06) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இவர் 8-வது முறையாக எடப்பாடியில் களம் காண்கிறார். அதோடு, மயிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,
243 தொகுதிகளில் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும். வரும் 15-ம் தேதி நடைபெற உள்ள பிரதமர் மோடியின் குமரி பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளேன்.
உதயநிதியே சிபிஎஸ்சி பள்ளி நடத்திக் கொண்டிருக்கிறார். அவர்கள் பள்ளி நடத்தினால் என்ன மொழியை வேண்டுமானாலும் அனுமதிப்பார்கள்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களும் தொடரும். எடப்பாடி மக்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளேன். ஒன்று இரண்டு கோரிக்கைகள் விடுபட்டிருந்தால் அதையும் நிறைவேற்றுவேன். சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது.
இதில் ஏன் திமுக டெல்லியுடன் போட்டி போட வேண்டும்? திமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ள அதிமுகவின் திட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்படும். அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது.
திமுக எம்.பி ஆ.ராசா பேசிய ஆடியோ வைரலானது. அது குறித்துதான் நான் கருத்து சொன்னேன்.
அவரை விட்டுவிட்டு என்மேல் பாய்வதில் என்ன இருக்கிறது. பெரும்பான்மையோடு அதிமுக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b