முன்னாள் காதலனை தாக்கிய விவகாரம் - காதலி உள்பட 4 பேர் கைதாகி சிறையில் அடைப்பு!
சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச) சென்னை கோயம்பேடு பகுதியில் முன்னாள் காதலனை கடத்திச் சென்று கட்டையால் தாக்கிய சம்பவத்தில், காதலி உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் (19) என்ற இளைஞர் மதுரவாயல் பகுதியில் உள்ள கல்லூ
Kidnap


சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை கோயம்பேடு பகுதியில் முன்னாள் காதலனை கடத்திச் சென்று கட்டையால் தாக்கிய சம்பவத்தில், காதலி உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் (19) என்ற இளைஞர் மதுரவாயல் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான ரித்திகா என்ற பெண்ணை காதலித்து, அவருடன் சென்னையின் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து ரித்திகா சசிகுமாரிடம் இருந்து இன்ஸ்டாகிராமில் ஆன்லைன் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாகக் கூறி சிறுகச்சிறுக ஒரு லட்சத்து 87 ஆயிரம் ரூபாயை வாங்கியுள்ளார். இதனால் சசிகுமார் கல்லூரிக்கு கட்டணம் செலுத்த முடியாமல் பாதியில் நின்று விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது, ரித்திகா வேறு ஒரு நபரை காதலிப்பது தெரியவந்து அதிர்ச்சி அடைந்த சசிகுமார், அது தொடர்பாக கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தான் கொடுத்த ஒரு லட்சத்து 87 ஆயிரம் ரூபாயை திரும்பத் தருமாறு கேட்டு ரித்திகாவிடம் சசிகுமார் வாக்குவாதம் செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி பணத்தை திரும்ப தருவதாக கூறி கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வருமாறு சசிகுமாரிடம் ரித்திகா தெரிவித்துள்ளார். அங்கு சென்றதும் சிவப்பு நிற காரில் தனது தோழி உட்பட நான்கு பேருடன் காத்திருந்த ரித்திகா, தாம்பரம் அருகே பணம் இருப்பதாகவும், அங்கு சென்றதும் பணத்தை தருவதாகவும் கூறி காரில் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் தாம்பரம் சென்றதும் அங்கு ஏற்கனவே பதுங்கி இருந்த ஐந்து நபர்களுடன் காரில் இருந்த ரித்திகா உட்பட நான்கு பேரும் சேர்ந்து சசிகுமாரை கட்டையால் அடித்து கால்வாய் அருகே போட்டு சென்று விட்டதாக தெரிகிறது. சுயநினைவு திரும்பிய சசிகுமார் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்து விட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அங்கு போலீசாரிடம் சசிகுமார் அளித்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய கோயம்பேடு போலீசார், சசிகுமார் கடத்தி தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் கடத்தலில் ஈடுபட்ட தாம்பரத்தை சேர்ந்த ரித்திகா (21), சஞ்சய் (22), சரவணன் (20) சேலையூரை சேர்ந்த தர்ஷினி (19) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஐபோன் மற்றும் காரையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கைதான நான்கு பேரும் காவல் துறை விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN