சென்னையில் 10 இடங்களில் ஐ.டி. திடீர் சோதனை- தேர்தல் பணப் பட்டுவாடா தகவலால் நடவடிக்கை
சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச) சென்னையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வருமான வரித்துறை அதிகாரிகள் தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து 10 இடங்களில் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். பணப் பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந
Elec


சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச)

சென்னையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வருமான வரித்துறை அதிகாரிகள் தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து 10 இடங்களில் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். பணப் பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. எழும்பூரில் உள்ள ஜே.எஸ்.எம். ரெசிடென்சி, பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு, புரசைவாக்கத்தில் உள்ள விடுதி உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2024ஆம் ஆண்டு சுமார் ₹2000 கோடி மதிப்பிலான சூடோபெட்ரின் என்ற போதைப் பொருளை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் நார்கோட்டிக்ஸ் கட்டுப்பாட்டு பணியகம் (NCB) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் அவரை கைது செய்து, தொடர்புடைய இடங்களில் முன்பும் சோதனை மேற்கொண்டிருந்தனர்.

சிறையில் இருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் அவரது தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்த முழு விவரங்கள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், போதைப் பொருள் கடத்தலின் மூலம் கிடைத்ததாகக் கூறப்படும் பெரிய அளவிலான பணம் தேர்தல் பணப் பட்டுவாடாவிற்கு பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ