Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச.)
தனித் தொகுதிகளில்
(SC reserved constituencies) இந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதங்களை பின்பற்றும் பட்டியல் இனத்தவருக்கே போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வில் நாளை அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இந்த மனுவை இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், தமிழகத்தில் உள்ள 44 தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் சுமார் 90 சதவீதம் பேர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இது தனித் தொகுதிகளின் அடிப்படை நோக்கத்தையே பாதிக்கிறது என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
மேலும், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பட்டியல் இனத்தவருக்கான தனித் தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சமூகத்தின் சமூக-மத அடையாளத்தையும் பாதுகாக்கும் வகையில் போட்டியாளர்களுக்கு சில வரையறைகள் இருக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறவுள்ளதால், வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை பரிசீலித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை நாளையே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு, தனித் தொகுதிகளில் போட்டியிடும் தகுதிகள் மற்றும் சட்ட விளக்கங்களுக்கு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகக் கருதப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ