எடப்பாடி பழனிசாமி மோடிக்கேத்த அடிமையாக செயல்பட்டு வருகிறார்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
தஞ்சை, 06 ஏப்ரல் (ஹி.ச) தஞ்சையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று திருவையாறு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, தஞ்சாவூர் என்பது திமுகவின் கோ
எடப்பாடி பழனிசாமி மோடிக்கேத்த அடிமையாக செயல்பட்டு வருகிறார்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்


தஞ்சை, 06 ஏப்ரல் (ஹி.ச)

தஞ்சையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று திருவையாறு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது,

தஞ்சாவூர் என்பது திமுகவின் கோட்டை. இந்த மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் 7 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

இந்த முறை 8 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்ல வேண்டும். இந்த மாவட்டத்தில் இருந்து தான் தலைவர் கருணாநிதி எம்எல்ஏவாக இரண்டு முறை தேர்வாகி உள்ளார், அவர் கால் தடம் படாத பகுதியே இல்லை. அந்த அளவுக்கு இந்த மாவட்டத்தில் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்துள்ளார்.

அதேபோல் தற்போதைய தலைவரும் தன்னை டெல்டா காரன் எனக் கூறி இந்தப் பகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அந்த பெருமிதத்தோடு நானும் டெல்டாக்காரன் எனக் கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன். இங்கு கூடியுள்ளவர்களை பார்த்தாலே ஒரு எழுச்சி தெரிகிறது, எனவே திமுக இங்கு வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

இங்கு போட்டியிடும் வேட்பாளர் துரை.சந்திரசேகரன் ஐந்து முறை எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார். இந்த முறை ஆறாவது முறையாக சிக்ஸர் அடித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவரை 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தால் நீங்கள் கேட்பது போல் அவரை அமைச்சராக்க தலைவரிடம் எடுத்துக் கூறுவேன்.

நானும் வேட்பாளராக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறேன், ஆனால் அதை அடிக்கடி மறந்து விடுகிறேன், கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறேன். நான் போட்டியிடும் தொகுதிக்கு கூட ஒரு முறை தான் சென்றுள்ளேன், தற்போது இந்த தொகுதியில் போட்டியிடும் துரை.சந்திரசேகரனை வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும் என உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.

இந்த திருவையாறு தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எம்எல்ஏவாக இருந்த துரை.சந்திரசேகரன் முயற்சியால் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது பல கோரிக்கைகளை துரை.சந்திரசேகரன் என்னிடம் வழங்கியுள்ளார், நிச்சயமாக திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் .

அதேபோல் தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் திமுக ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றிய தர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு போதிய நிதியை வழங்க மறுத்து வருகிறது .ஆனால் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயற்சிகளை எடுத்து வருகிறது இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜாடிக்கேத்த மூடி மாதிரி மோடிக்கேத்த அடிமையாக செயல்பட்டு வருகிறார்.

பதவிக்காக நான் யார் காலில் விழும் அனுபவம் எனக்கு கிடையாது, ஆனால் பழனிசாமி பதவிக்காக ஜெயலலிதா, சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரது காலில் விழுந்து, பின்னர் அவர்களது காலையும் வாரி விட்டவர். தற்போது மோடியின் காலை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தை ஆள எடப்பாடி பழனிசாமியை பாஜக ஒரு ரிமோட்டாக மாற்றி வருகிறது.

இந்த முறை டெல்லி அணிக்கும் தமிழகத்துக்கும் நடைபெறும் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு இன்னும் 16 நாட்கள் தான் உள்ளன. இதில் ஒவ்வொருவரும் அவரவர் பகுதிக்கு சென்று தங்களிடம் தெரிந்தவரிடம் திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்து திருவையாறு தொகுதியில் துரை.சந்திரசேகரனை வெற்றி பெறச் செய்தால் நீங்கள் கேட்டது போல் அவரை அமைச்சராக்க தலைவரிடம் எடுத்துக் கூறுவேன்.

இவ்வாறு உதயநிதி கூறினார்.

Hindusthan Samachar / vidya.b