Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச)
தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராக இன்று காலை 11 மணிக்கு பதவியேற்கிறார்.
மார்ச் 2026-ல் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், அதனைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ வெற்றிச் சான்றிதழையும் பெற்றிருந்தார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் சகோதரரான எல்.கே. சுதீஷ், கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும், பொருளாளராகவும் இருந்து வருகிறார். கட்சியின் வளர்ச்சிக்கும், கூட்டணி அரசியலிலும் அவர் வகிக்கும் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக, எல்.கே. சுதீஷ் தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சியினருடன் சேர்ந்து டெல்லி சென்றுள்ளார். சுமார் 50 பேர் கொண்ட குழுவுடன் அவர் பயணம் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் காலியாகியிருந்த 6 மாநிலங்களவை இடங்களுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில் 4 இடங்கள் திமுக கூட்டணிக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைத்தன. திமுக தனது பங்கில் ஒரு இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கும், மற்றொரு இடத்தை தேமுதிகவுக்கும் ஒதுக்கியது. அதன் அடிப்படையில் தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின்னர் வெற்றிபெற்றார்.
மீதமுள்ள இரு இடங்களில் திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், எல்.கே. சுதீஷ் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பது, தேமுதிக கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் முக்கிய அரசியல் முன்னேற்றமாக கருதப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ