Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 06 ஏப்ரல் (ஹி.ச.)
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டவுண் முதல் திருவனந்தபுரம் வரையிலான இரட்டை ரெயில் பாதை பணிகள் தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக நாகர்கோவில் டவுண் முதல் இரணியல் வரையிலான சுமார் 12 கி.மீ. தூரத்திற்கு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 30 மற்றும் 31-ந் தேதிகளில் இந்த புதிய பாதையில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
முதல் நாளன்று ரெயில் என்ஜின் மெதுவாக இயக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் நாளில் அதிவேகமாக இயக்கப்பட்டு தண்டவாளத்தின் உறுதித்தன்மை சோதிக்கப்பட்டது.
இந்த மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, கடந்த மாதம் 30-ந்தேதி முதல் கடந்த 2-ந் தேதி வரை 4 நாட்களுக்கு ரெயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதனால் பயணிகள் குறிப்பிட்ட சில நாட்களுக்கு சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் இந்த புதிய தண்டவாளத்தில் ரெயில்கள் இயங்க தொடங்கின. குறிப்பாக, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் புதிய தண்டவாளத்தில் அமைந்துள்ள 1-வது நடைமேடை வழியாக இயக்கப்பட்டது பயணிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இதற்கு முன்பு, அனந்தபுரி மற்றும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லும்போது 2-வது நடைமேடையிலும், நாகர்கோவில் மார்க்கமாக வரும் போது 3-வது நடைமேடையிலும் நிறுத்தப்பட்டன.
இதனால் பயணிகள் தங்களது கனமான உடைமைகளுடன் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. முதியவர்கள் மற்றும் நோயாளிகள் இந்த நடைமேடை மாற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
தற்போது ரெயில்கள் நேரடியாக 1-வது நடைமேடைக்கே வந்து செல்வதால், படிக்கட்டுகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் குறைந்து, பயணிகளின் நீண்ட கால இன்னல்கள் நீங்கியுள்ளன. இந்த புதிய வசதி குமரி மாவட்ட ரெயில் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM