Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் கடந்த மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் முதல் நாளிலேயே வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் உட்பட முதல் நாளில் மொத்தம் 867 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதுவரை 3 நாட்கள் மட்டுமே வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதுவரை 3,430 மனுக்கள் இதில் 2,731 ஆண்கள், 698 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 3,430 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 84 மனுக்கள், பர்கூர் தொகுதியில் 29 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக மானாமதுரை, நிலக்கோட்டையில் தலா 5 மனுக்களும், காட்டுமன்னார்கோவில், திருவாரூர், பேராவூரணி, கந்தர்வகோட்டை ஆகிய தொகுதிகளில் தலா 6 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இதுவரை 282 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக தியாகராய நகர்தொகுதியில் 28 மனுக்கள், குறைந்தபட்சமாக ஆயிரம் விளக்கு தொகுதியில் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேர்தல் அறிவிக்கையில் கூறியபடி அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைகிறது. இன்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும்.
இன்று ஒரு நாள் மட்டுமே அவகாசம் இருப்பதால், தமிழகம் முழுவதும் அதிமுக, பாஜக வேட்பாளர்கள், கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட மதுரை மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, எடப்பாடி தொகுதியிலும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, தருமபுரி தொகுதியிலும் மனு தாக்கல் செய்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, நாளை காலை 11 மணிக்கு, அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். ஏற்கப்பட்ட, தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் விவரம் நாளை மாலை வெளியாகும். வேட்புமனுக்களை திரும்பப்பெற ஏப்ரல் 9-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னங்களைப் பொருத்தும் பணிகள் ஏப்ரல் 10-ம் தேதி முதல் தொடங்க உள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b