Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச.)
மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று சுற்றுலா பயணிகள் பலர் கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது மண்ணில் பாதி புதைந்த நிலையில் 3 அடி உயர அம்மன் சிலை கரை ஒதுங்கியது.
200 கிலோ எடையுள்ள இந்த அம்மன் சிலை, பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் வலது, இடது என 4 கைகளில் முறையே சூலம், உடுக்கை, கத்தி, சிலம்பு வைத்திருக்கின்ற கோலத்தில் காணப்படுகிறது.
நடைபாதை வியாபாரிகள் சிலர் அம்மன் சிலை கரை ஒதுங்கியது குறித்து மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு விரைந்து வந்து, மண்ணில் புதைந்து கிடந்த அம்மன் சிலையை தோண்டி எடுத்து நிமிர்த்தி வைத்தனர்.
அந்த சிலையை எடுத்து சென்று விசாரணை நடத்த வருவாய்த்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
திருக்கழுக்குன்றம் தாசில்தார் தேவேந்திரன் உத்தரவின்பேரில் மாமல்லபுரம் வருவாய் அலுவலர் புஷ்பராஜ் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து அந்த சிலையை எடுத்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த அம்மன் சிலை எப்படி கரை ஒதுங்கியது, இது பழங்கால அம்மன் சிலையா? அல்லது கடற்கரையில் அம்மன் சிலையுடன் பரிகார பூஜை செய்ய வந்து இந்த சிலையை யாராவது கடற்கரையில் விட்டு சென்றார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM