காதலியை கரம் பிடிக்க மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்- போச்சம்பள்ளியில் 4 மணி நேர பரபரப்பு!
கிருஷ்ணகிரி, 06 ஏப்ரல் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால், வாலிபர் ஒருவர் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற
தற்கொலை மிரட்டம்


கிருஷ்ணகிரி, 06 ஏப்ரல் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காதலிக்கு வேறு இடத்தில் திருமணம்

செய்ய ஏற்பாடு செய்ததால், வாலிபர் ஒருவர் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி

தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை

ஏற்படுத்தியுள்ளது.

போச்சம்பள்ளி அடுத்த குள்ளம்பட்டி ஊராட்சி, கோடியூர்

கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ஜெகன் (எ) அஜித்குமார். இவர் கடந்த

நான்கு ஆண்டுகளாக அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து

வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், அந்தப் பெண்ணிற்கு அவரது குடும்பத்தினர் வேறு இடத்தில் வரன்

பார்த்து திருமண ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.

இதனை அறிந்த ஜெகன், தனது

குடும்பத்தினருடன் பெண் கேட்டுச் சென்றுள்ளார். ஆனால் பெண்ணின் வீட்டார் இதற்குச் சம்மதிக்காமல் மறுப்பு தெரிவித்ததுடன், அவரை மிரட்டியதாகவும்

தெரிகிறது.

இந்நிலையில், இன்று பெண்ணின் வீட்டார் திருமணத்தை உறுதி

செய்வதற்காக மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

இந்தத் தகவலை அறிந்த ஜெகன் மிகுந்த அதிர்ச்சியடைந்தார். மனவேதனையடைந்த அவர், திடீரென

தனது கிராமத்தின் அருகிலுள்ள உயர்மின் கோபுரத்தின் (High Tension Tower) மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த

இடத்திற்கு விரைந்து வந்து, ஜெகனின் செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு கீழே

இறங்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர் இறங்க மறுத்ததால்,

போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கும் மத்தூர் போலீசாருக்கும் தகவல்

தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு

வீரர்கள் ஜெகனிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இறுதியாக, கிராம மக்கள் மற்றும் போலீசார் தலையிட்டு, பெண் வீட்டாரிடம் பேசி உங்கள் திருமணத்தை

நடத்தி வைக்கிறோம் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, சுமார் 4 மணி நேர

போராட்டத்திற்குப் பிறகு ஜெகன் கீழே இறங்கினார்.

காதலியைக் கரம் பிடிக்க வாலிபர் மின் கோபுரத்தில் ஏறிய இந்தச் சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam