Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னையில் வில்லிவாக்கம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் தவெக தலைவர் விஜய் இன்று மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
தவெக சார்பில் கேட்கப்பட்ட நேரத்தை காவல்துறை ஒதுக்காததால், தனது பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக 20 நாட்கள் கூட இல்லை. இதனையொட்டி, மாநிலம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும், திமுக - அதிமுகவுக்கு இணையாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 234 தொகுதிகளில் கட்சி வேட்பாளர்களை அறிவித்த விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.
இதற்காக கடந்த சில வாரங்களாகவே விஜய் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் பெரம்பூர், கொளத்தூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்த விஜய், வில்லிவாக்கத்தில் பரப்புரை செய்யாமல் வீடு திரும்பினார்.
கட்டுங்கடங்காத கூட்டத்தால், அவரால் குறித்த நேரத்தில் பிரச்சாரத்தை முடிக்க முடியாததால் வில்லிவாக்கம் தொகுதிக்கு அவரால் செல்ல முடியாமல் போனது. இதனிடையே, கொளத்தூரில் விஜய் பிரச்சாரத்துக்கு காவல்துறை போதிய பாதுகாப்பை வழங்கவில்லை என ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த சூழலில், இன்று வில்லிவாக்கம், தி.நகர், அண்ணாநகர்,விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்தது. இதற்கு அனுமதி கேட்டு காவல்துறையிடமும் கடிதம் வழங்கப்பட்டது.
வில்லிவாக்கம் தொகுதியில் காலை 11 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், திநகர் தொகுதியில் மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் விஜய் பிரச்சாரம் செய்ய தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், வில்லிவாக்கத்தில் 12 மணி முதல் 1.00 மணி வரையிலும், தி நகர் தொகுதியில் 2 மணி முதல் 3 மணி வரையிலும் மட்டும் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
அதாவது, போலீசார் கொடுத்த அனுமதியின் படி, வில்லிவாக்கத்தில் இருந்து தி.நகருக்கு விஜய் ஒரு மணிநேரத்தில் செல்ல வேண்டும். ஆனால், விஜய்க்கு கூடும் கூட்டத்தை தாண்டி, ஒரு மணிநேரத்தில் அவர் தி.நகர் செல்ல வாய்ப்பே இல்லை. காவல்துறையின் இந்த பதிலால் விஜய் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தாங்கள் கேட்ட நேரத்தை ஒதுக்காமல், மிகக் குறைவான நேரத்தை காவல்துறை வழங்கியதால் தவெக தலைவர் விஜய் தனது பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN