Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 06 ஏப்ரல் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வசந்தம் கார்த்திகேயன் மூன்றாவது முறையாக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தொகுதிக்கு உட்பட்ட பாசார் கிராமத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக வசந்தம் கார்த்திகேயன் வருவதாக கூறப்பட்டிருந்தது.
இதனை அடுத்து அந்த பகுதியை சேர்ந்த திமுகவினர் காலையிலேயே சென்று உதயசூரியன் சின்னம் தவிர்த்து த.வெ.க வின் விசில் மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள பா.ம.க வின் மாம்பழம் சின்னம் ஆகியவை வரையப்பட்டிருந்த வீடுகளில் சுண்ணாம்பு அடித்து வெண்மை பூசி சின்னங்களை அழித்ததாக சொல்லப்படுகின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்தந்த பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சின்னம் வரையப்பட்ட வீடுகளில் சுண்ணாம்பு அடித்த திமுகவினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திமுக தவிர்த்து மாற்று கட்சியின் சின்னங்கள் வரையப்பட்டிருந்த ஒரு சில வீட்டின் உரிமையாளர்கள் அதனை அழித்து உள்ளனர். அது குறித்து கேட்கும் போது, உதயசூரியன் சின்னத்தை வரையாத வீடுகளுக்கு பணம் வழங்க கூடாது என கூறியதால் அழித்ததாக வீட்டின் உரிமையாளர் பேசி இருக்கிறார்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வேட்பாளர் வந்து சென்று பிறகு மீண்டும் சின்னம் வரைந்து விடுகிறோம் என்று திமுகவினர் அவர்களிடம் பேசி இருக்கின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN