Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஏப்ரல் (ஹி.ச.)
திருச்சியில் இருந்து தேனி நோக்கி சென்ற தமிழ்நாடு அரசு பேருந்தின் மின்னணு வழித்தட பலகையில் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சி பெயர் இடம்பெற்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், திருச்சி மண்டலம் விளக்கம் அளித்துள்ளது. அதில், வைரலாகும் வீடியோவில் காணப்படும் பேருந்து திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த புதிய பேருந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணு வழித்தட பலகையில் தவறான வாசகங்கள் இடம்பெற்றது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அடையாளம் தெரியாத நபர்கள் பலகையை இயக்கும் மென்பொருள் அமைப்பை (மதர்போர்டு) ஹேக் செய்து இத்தகைய பதிவுகளை செய்திருக்கலாம் என தெரியவந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சம்பவம் கவனத்திற்கு வந்தவுடன், அந்த மின்னணு பலகையின் மதர்போர்டு மாற்றப்பட்டு, சரியான வழித்தட தகவல்கள் பதிவேற்றப்பட்டன. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு சேவை வழங்கும் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ