Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்திற்கு ₹1302 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தேர்தல் பணிகளுக்காக இதுவரை ₹1,032 கோடி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். மேலும், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ₹795 கோடி, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ₹1,009 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை கூடுதலாக நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 5,938 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்விடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடாக துணை ராணுவம், நுண் பார்வையாளர்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என கூறினார்.
அதிக வெப்பநிலையை கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்களுக்கு பந்தல், இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பணியாற்றும் அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகளும் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழகம் முழுவதும் 43,220 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், “சி-விஜில்” செயலி மூலம் 2,600 புகார்கள் பெறப்பட்டு, அவற்றில் 2,364 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதற்காக ₹462 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ₹182 கோடி அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், மீதமுள்ள ₹279 கோடி மதிப்பிலான பொருட்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தேர்தல் பணிக்காக வரும் 13ஆம் தேதிக்குள் துணை ராணுவ படையினர் தமிழகம் வந்தடைவார்கள் என்றும், 85 வயதிற்கு மேற்பட்ட 2.5 லட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கிற்காக பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ