Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.)
மதுரை தெற்கு தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் ஃபட்னாவிஸ் கூறுகையில், ராம சீனிவாசன் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடியை அணுகினால், மெட்ரோ திட்டம் மதுரையை சென்றடையும் எனத் தெரிவித்திருந்தார்.
இதனைக் குறிப்பிட்டு தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது குறித்து முன்னாள் தமிழக பாஜக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
மதுரை மெட்ரோ திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைக் கூட, முறையாகத் தயாரித்துக் கொடுக்க இயலாத கையாலாகாத திமுக அரசின் முதலமைச்சர் திரு
ஸ்டாலின் அவர்களே,
மாண்புமிகு மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்கள் கூறியதன் பொருள் என்னவென்றால், தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், விரிவான திட்ட அறிக்கை முறையாகத் தயாரிக்கப்பட்டு, மதுரை மெட்ரோ திட்டத்துக்கான அனுமதி பெறப்படும் என்பதுதான்.
ஆட்சிக்கு வந்தவுடன், வெளிநாட்டு முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் குடும்பத்துடன் பலமுறை இன்பச் சுற்றுலா சென்றீர்களே. என்ன முதலீடு வந்தது? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? மத்திய அரசின் திட்டங்களால் பெறும் வளர்ச்சிக்கு, உங்கள் ஸ்டிக்கரை ஒட்ட கூச்சமாக இல்லையா?
உங்கள் ஆட்சியில், குப்பை அள்ளுவதில் கூட ஊழல் செய்து, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாநகரங்களை குப்பைக் கூடங்களாக மாற்றி, குப்பை மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. மதுரையில் அமைப்போம் என்று உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய வேளாண் பல்கலைக்கழகம் எங்கே?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b