Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்று (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது.
இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள் அடங்கிய திருத்தப்பட்ட பட்டியலை இன்று (07.04.2026) வெளியிட்டுள்ளது.
அதாவது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள இந்தக் கடிதத்தில், முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலில் ஒரு சில பெயர்கள் மாற்றப்பட்டு, தற்போது 40 பேர் கொண்ட புதிய பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா, கே.சி. வேணுகோபால் மற்றும் ப. சிதம்பரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், அண்டை மாநில முதல்வர்களான சித்தராமையா, ஏ. ரேவந்த் ரெட்டி மற்றும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களான சச்சின் பைலட், சசி தரூர் ஆகியோருடன் தமிழக காங்கிரஸ் காட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட மாநிலத் தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தப் பிரம்மாண்டப் பட்டாளம் விரைவில் தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளது எனக் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b