தங்க நகைகளால் கவனம் ஈர்த்த ஹரி நாடாரின் வேட்பு மனு நிராகரிப்பு
தென்காசி, 07 ஏப்ரல் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் “நடமாடும் நகைக்கடை” எனப் பெயர் பெற்ற ஹரி நாடார், இந்த முறை சிறையிலிருந்தே போட்டியிடுவதாக அறிவித்து அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த
Hari Nadar's Nomination Paper Rejected


தென்காசி, 07 ஏப்ரல் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் “நடமாடும் நகைக்கடை” எனப் பெயர் பெற்ற ஹரி நாடார், இந்த முறை சிறையிலிருந்தே போட்டியிடுவதாக அறிவித்து அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளார்.

உடல் முழுவதும் கிலோகணக்கில் தங்க நகைகள் அணிந்து ஹெலிகாப்டரில் வந்து அப்போது பிரசாரம் செய்த அவர், 37,726 வாக்குகள் பெற்று பேசு பொருளானார். பனங்காட்டுப்படை கட்சியில் இருந்து விலகிய அவர், பின்னர் “சத்திரிய சான்றோர் படை” என்ற கட்சியைத் தொடங்கினார்.

இதற்கிடையில் வங்கிக் கடன் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார். சில தினங்களுக்கு முன்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது கட்சி நிர்வாகிகளை சந்தித்த ஹரி நாடார், வரும் தேர்தலில் சிறையிலிருந்தே ஆலங்குளத்தில் போட்டியிட ஏற்பாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் இன்றைய வேட்புமனு பரிசீலனையில் ‘நடமாடும் நகைக்கடை’ ஹரி நாடார் ஆலங்குளத்தில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு முன்மொழிந்தவர்களில் ஒருவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் பிழையோடு இருந்ததால் ஹரி நாடாரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Hindusthan Samachar / vidya.b