ஐ.சி.சி.யின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருது பட்டியலில் சாம்சன், பும்ரா
துபாய், 07 ஏப்ரல் (ஹி.ச.) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஒவ்வொரு மாதமும் உலகம் முழுவதும் சிறப்பாக செயல்படும் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ‘மாதத்தின் சிறந்த வீரர்’ மற்றும் ‘வீராங்கனை’ விருதுகள் வழங்கப்ப
ஐ.சி.சி.யின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருது பட்டியலில் சாம்சன், பும்ரா


துபாய், 07 ஏப்ரல் (ஹி.ச.)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஒவ்வொரு மாதமும் உலகம் முழுவதும் சிறப்பாக செயல்படும் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ‘மாதத்தின் சிறந்த வீரர்’ மற்றும் ‘வீராங்கனை’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த விருதுகள், அந்த மாதத்தில் சர்வதேச போட்டிகளில் வெளிப்படுத்திய ஆட்ட திறன், அணிக்கு அளித்த பங்களிப்பு மற்றும் தனிப்பட்ட சாதனைகள் போன்ற பல அம்சங்களை கருத்தில் கொண்டு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, மார்ச் மாதத்திற்கான ‘சிறந்த வீரர்’ விருதுக்கான பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சமீபத்தில் நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தனது திறமையை வெளிப்படுத்திய இந்திய அணியின் சஞ்சு சாம்சன் மற்றும் அனுபவம் மிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களுடன், தென் ஆப்பிரிக்க அணியின் திறமையான வீரர் கனோர் எஸ்டர்ஹய்ஜென் கூட இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

சாம்சன் தனது தாக்குதல்மிகு பேட்டிங் மற்றும் தொடர்ச்சியான ரன்கள் மூலம் கவனம் ஈர்த்துள்ள நிலையில், பும்ரா தனது துல்லியமான பந்துவீச்சு மற்றும் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றும் திறனால் அணிக்கு பல வெற்றிகளைத் தேடி தந்துள்ளார். மறுபுறம், எஸ்டர்ஹய்ஜென் தனது அணிக்காக பல்வேறு கட்டங்களில் முக்கிய பங்களிப்பை வழங்கி இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இவர்களில் யார் மார்ச் மாதத்திற்கான ‘சிறந்த வீரர்’ விருதை வெல்லப் போகிறார்கள் என்பது ரசிகர்கள் அளிக்கும் ஆன்லைன் வாக்குகள் மற்றும் ஐ.சி.சி. நியமித்த நிபுணர் குழுவினரின் மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

இதனால், ரசிகர்களின் ஆதரவும் இந்த விருது தேர்வில் முக்கிய பங்காற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM