Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது ஜூன் 19ஆம் தேதி கடையை மூடாததால் செல்போன் கடை வைத்திருந்த தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அவர்கள் இருவர் மீது காவல் நிலையத்தில் வைத்து போலீசார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
6 வருட விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கில் நேற்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், சாமிதுரை, முத்துராஜ், செல்லத்துரை, வெயிலுமுத்து மற்றும் தாமஸ் ஆகிய 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்தார். மேலும், குற்றவாளிக்கு மரண தண்டனையுடன் கூடிய அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமலஹாசன் எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,
சாத்தான்குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறிகையில் நெஞ்சம் பதைக்கிறது.
நாட்டையே அதிரச் செய்த இந்த அநீதிக்கு எதிராக, விடாமல் போராடிய ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தார், சாத்தான்குளம் ஊர்ப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஆதாரங்களுடன் குற்றத்தை நிரூபித்த சிபிஐ விசாரணை அதிகாரிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
தனிப்பட்ட முறையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன். கொடுங்குற்றம் இழைத்தவர்கள் எவ்வித சலுகையுமின்றி ஆயுட்காலம் உள்ளவரை கடும் உழைப்புடன் சிறை வைக்கப்பட வேண்டுமென்பதே என் நிலைப்பாடு.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரின் குடும்பங்களை எண்ணிப்பார்க்கிறேன். மனிதத்தன்மையற்ற காரியத்தில் ஈடுபட்டு, ஒரு பாவமும் அறியாத தங்களது குடும்பத்தாருக்கு எவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள்?
போலீஸாரின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்தவர்களைப் பார்க்காமலே சான்றிதழ் அளித்த மருத்துவர், ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டவர், உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், இருவரும் மூச்சுத் திணறலால் இறந்தார்களென மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது.
அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறோம், நம்மை யார் என்ன செய்துவிட முடியும் எனும் துணிச்சலில் குற்றமிழைப்பவர்கள் எவராயினும், அவர் எத்தகைய செல்வாக்கு படைத்தவரெனினும் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b