அரசு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் பயணங்களுக்குக் கட்டண விலக்கு பொருந்தாது - நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
புதுடெல்லி, 07 ஏப்ரல் (ஹி.ச) இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணத்தை வேகப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் சுங்க
Ministry of Highways Directive.


புதுடெல்லி, 07 ஏப்ரல் (ஹி.ச)

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணத்தை வேகப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

அதன்படி, வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கமாகப் பணம் செலுத்தும் முறை முழுமையாக ரத்து செய்யப்பட்டு, அனைத்துப் பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன.

இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஏப்ரல் 10 முதல் பாஸ்டேக் (FASTag) அல்லது மின்னணு முறைகளில் மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்.

வாகனத்தில் பாஸ்டேக் வசதி இல்லையென்றால், யு.பி.ஐ (UPI) மூலம் கட்டணம் செலுத்தலாம். ஆனால், சாதாரணக் கட்டணத்தை விட 1.25 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தத் தவறினால், வாகனங்கள் சுங்கச்சாவடியைக் கடக்க அனுமதி மறுக்கப்படலாம். மின்னணு அறிவிப்பு அனுப்பப்பட்ட மூன்று நாட்களுக்குள் கட்டணத்தைச் செலுத்தத் தவறினால், இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும்.

அரசு அலுவலகப் பணிகளுக்காகப் பயணிக்கும் வாகனங்களுக்கு மட்டுமே கட்டண விலக்கு அளிக்கப்படும்.

அடையாள அட்டையைக் காண்பித்து விலக்கு பெறும் நடைமுறை இனி கிடையாது.

கட்டண விலக்கு பெற விரும்புவோர் முறையாக விண்ணப்பிக்க வேண்டும் அல்லது 'ஆண்டுப் பயண அட்டை' (Annual Pass) பெற்றுக்கொள்ள வேண்டும்.

அரசு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் பயணங்களுக்குக் கட்டண விலக்கு பொருந்தாது.

அடிக்கடி பயணம் செய்பவர்கள் மற்றும் அரசு வாகனங்கள் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக எளிதாக விண்ணப்பிக்கலாம்.

'ராஜ்மார்க் யாத்ரா' (Rajmarg Yatra) செயலி அல்லது NHAI மற்றும் MoRTH அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பாஸ்டேக் கணக்கில் உள்நுழைந்து, வாகனப் பதிவு எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு, UPI, நெட் பேங்கிங் அல்லது கார்டுகள் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்திய 24 மணி நேரத்திற்குள் பாஸ் செயல்பாட்டிற்கு வரும். இது ஓராண்டு காலம் அல்லது 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கும் வரை செல்லுபடியாகும்.

நாடு முழுவதும் உள்ள சுமார் 1,200 சுங்கச்சாவடிகள் மூலம் தினசரி 1.16 கோடி ரூபாய் பாஸ்டேக் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. 2025-26 நிதியாண்டில் சுங்க வசூல் 82,900 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றங்கள் மூலம் நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் குறைந்து, பயணம் தடையின்றி அமையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b