காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு
தமிழ்நாடு, 07 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்று
டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர்


தமிழ்நாடு, 07 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளில் உள்ள அதிகாரிகள், தங்கள் நேரடி அதிகாரப் படிநிலைக்கு அப்பாற்பட்ட பிற அதிகாரிகளிடமிருந்து அலுவல் ரீதியான உத்தரவுகளைப் பெற்று வருவதாகத் தனது குறிப்பில் ரத்தோர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனிவரும் காலங்களில், தங்களுக்கு மேலதிகாரிகளாக இல்லாத மற்ற அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். இத்தகைய விதிமீறல்கள் அல்லது அதிகார வரம்பு மீறல்கள் ஏதேனும் நடந்தால், அதனை உடனடியாகத் தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் மேற்பார்வை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சட்டம்-ஒழுங்கு மற்றும் சிறப்புப் பிரிவுகளின் தலைவர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் குறித்து உடனடியாகத் தனக்கும், தங்களது மேலதிகாரிகளுக்கும் தெரிவிக்க வேண்டும். நேரமின்மை அல்லது இணையத் தொடர்புப் பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில், குறுஞ்செய்தி வாயிலாகவாவது தகவலைத் தெரிவிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மண்டல ஐ.ஜி.க்கள், காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பி.க்களுடன் நடத்தப்பட்ட காணொளிக்காட்சி கூட்டத்தில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து டி.ஜி.பி. விரிவாக ஆலோசனை நடத்தினார்.

ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவு மற்றும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றி நேர்மையான தேர்தலை உறுதி செய்ய வேண்டும்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக விஐபிக்கள் மாநிலம் முழுவதும் பயணம் செய்வதால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

வன்முறை ஏற்பட வாய்ப்புள்ள பதற்றமான பகுதிகள் மற்றும் மாநில எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்.

மதுபானம் மற்றும் சட்டவிரோதப் பணப் புழக்கத்தைத் தடுக்கவும், சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் எல்லையோரப் பகுதிகளில் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படுமாறு அறுவுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam