Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.)
2026 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஏப்ரல் 07) தொடங்கியிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் விஜய் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
அதன்பின்னர், 4 பொது விடுமுறை நாட்களில் மனு தாக்கல் நடைபெறவில்லை. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், அனைத்து தொகுதிகளிலும் காலை முதலே மனு தாக்கல் களைகட்டியது. எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. இத்தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நான்காவது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய்யின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
அதேபோல், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி, சாத்தூரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தருமபுரியில் சவுமியா அன்புமணி, காரைக்குடியில் சீமான் ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்,நன்னிலம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. தலைவர் முகம்மது முபாரக், நாகையில் ஜவாஹிருல்லா, மணப்பாறையில் அப்துல் சமது ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர்பாபு, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b