Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 07 ஏப்ரல் (ஹி.ச.)
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அவரது மகனும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் மற்றும் காங்கிரஸ் பிரமுகர் டீக்காராமன் ஆகியோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
நேற்று காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக உள்ள துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஊர்வலமாக வந்தார். இந்த ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் திரண்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், பட்டாசுகள் வெடித்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் சம்பவத்தை கவனித்து, காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) விஸ்வநாதன் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புகாரில், அனுமதியின்றி ஊர்வலம் நடத்துதல், பட்டாசு வெடித்தல் மூலம் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதனையடுத்து, BNS சட்டத்தின் 189(2), 288 மற்றும் 292 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் துரைமுருகன், கதிர் ஆனந்த் மற்றும் டீக்காராமன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
தேர்தல் காலத்தில் விதிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் என அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இத்தகைய சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகின்றன.
Hindusthan Samachar / ANANDHAN