பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனு ஏற்பு
சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.) 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கடந்த 30-ந்தேதி வியாசர்பாடியில் உள
பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனு ஏற்பு


சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.)

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கடந்த 30-ந்தேதி வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜய் தாக்கல் செய்தார்.

இதேபோல, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கடந்த 2-ந்தேதி திருச்சியில் விஜய் தாக்கல் செய்தார். 2 இடங்களில் வேட்புமனு தாக்கலில் பிரமாண பத்திரத்தில் தனது சொத்துகள் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு இருந்தார்.

இதில் திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் தன் மீது 2 குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவில், தன் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என பிரமாண பத்திரத்தில் விஜய் குறிப்பிட்டு இருந்தார்.

இதேபோல, விஜய்யின் பிரமாண பத்திரங்களில் பெரம்பூரில் 52 வயது என்றும், திருச்சி கிழக்கில் 51 வயது எனவும் வெவ்வேறாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக அந்த மனுக்களில் குழப்பம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே, பெரம்பூர் தொகுதியில் விஜய் தாக்கல் செய்த மனுவின் நிலை என்ன ஆகும்? என்ற கேள்வி எழுந்தது.

இது குறித்து, பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்து களை தெரிவித்து வந்தனர். மேலும், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த மனு விஜயால் திருத்தப்படாமல் போனால், அவரது மனு நிராகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

வேட்புமனுவில் உள்ள தவறு உடனடியாக சரிசெய்யப்பட்ட தால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட வாய்ப்பு இல்லை என்றும், இந்த விவகாரத்தில் இனி எந்த சிக்கலும் வராது என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, திருச்சி கிழக்கு தொகுதியிலும் த.வெ.க. நிர்வாகிகளால் திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இன்று முதல் வேட்புமனு பரிசீலனை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விஜய்யின் மனு ஏற்கப்பட்டுள்ளது. விஜய் மனு ஏற்கப்பட்டதற்கு திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b