Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.)
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சி அலுவலகங்களை நிரந்தர கட்டிடங்களில் அமைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் இளங்கோ சார்பில் இந்த முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் தற்காலிக அலுவலகங்களை அமைப்பது வழக்கமாக உள்ள நிலையில், நிரந்தர கட்டிடங்களில் மட்டுமே அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் சாத்தியமற்றது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் பிரச்சார காலம் குறுகியதாக இருக்கும் நிலையில், வெறும் 20 நாட்களுக்காக நிரந்தர கட்டிடங்களை அமைப்பது சாத்தியமில்லை என்றும், இது கட்சிகளுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி அமர்வு, இதனை முறையான மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
இதனால், தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு குறித்து விரைவில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ