Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச)
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்று (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மற்றொருபுறம் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் தனது பிரசாரத்தை கடந்த மாதம் 31-ந்தேதி அவரது சொந்த ஊரான திருவாரூரில் இருந்து தொடங்கினார்.
ஏற்கனவே 2 கட்ட பிரசாரத்தை முடித்த அவர் 3-வது கட்ட பிரசாரத்தை புதுச்சேரியில் நேற்று தொடங்கினார். இன்று (ஏப்ரல் 07) மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய தொகுதி வேட்பாளர்களையும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து வைத்தீஸ்வரன்கோவில்- சீர்காழி இடையே சட்டநாதபுரத் தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று மாலை 4 மணிக்கு கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த நிலையில், சீர்காழியில் தென்பாதி பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் நின்றுகொண்டிருந்த பொதுமக்களிடமும் நலம் விசாரித்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனை முதலமைச்சர் ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
Hindusthan Samachar / vidya.b