Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஏப்ரல் (ஹி.ச.)
மதுரை தெற்கு தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் ஃபட்னாவிஸ் கூறுகையில், ராம சீனிவாசன் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடியை அணுகினால், மெட்ரோ திட்டம் மதுரையை சென்றடையும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதனைக் குறிப்பிட்டு தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்இன்று கூறியிருப்பதாவது,
பா.ஜ.க. எம்.எல்.ஏ -வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா?
அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.
நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும்.
டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, திராவிட மாடல் அரசு ஆளும் தமிழ்நாடுதான் இரண்டு இலக்க பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b