தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் எங்கே சென்று பிரச்சாரம் செய்வார்கள்?- உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை கே.கே.நகர் குடியிருப்போர் நலசங்கத்தின் பொதுச் செயலாளர் ரவிசங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘ தங்களின் குடியிருப்பு பகுதியில் அரசியல் கட்சியினர் உரிய அனுமதி பெறாமல் கூட்டங
Madras High Court


சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை கே.கே.நகர் குடியிருப்போர் நலசங்கத்தின் பொதுச் செயலாளர் ரவிசங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘ தங்களின் குடியிருப்பு பகுதியில் அரசியல் கட்சியினர் உரிய அனுமதி பெறாமல் கூட்டங்களை நடத்துவதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கூட்டங்களுக்காக அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் ஒலி மாசு ஏற்படுகிறது. மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதால் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என காவல் துறையினருக்கு தடைவிதிக்க வேண்டும்.

மேலும், அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டங்களுக்காக மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரை தடுப்புகளை அமைத்து பொதுக்கூட்டம் நடத்துகின்றனர்.

இதனால் அவசர தேவைகளுக்கு கூட செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகுகின்றனர்.

எனவே, சாலைகளை ஆக்கிரமித்து பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தக் கூடாது. அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுகூட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2024 ஆம் ஆண்டு அளித்த கோரிக்கை மனு மீது தற்போது உத்தரவிட முடியாது. சமீபத்தில் எங்கு, எப்போது கூட்டம் நடத்தப்பட்டது என்ற எந்த விவரங்களும் மனுவில் இல்லை. எதனடிப்படையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க முடியும்? என கேள்வி எழுப்பினர்.

மேலும், குறிப்பிட்ட நிபந்தனைகளின் படியே, பொதுக்கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி வழங்குகிறது.

தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் எங்கே சென்று பிரச்சாரம் செய்வார்கள்? என கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN