ஈரான் - அமெரிக்க தற்காலிக போர் நிறுத்தம் எதிரொலி - கச்சா எண்ணெய் விலை சரிவு
வாஷிங்டன், 08 ஏப்ரல் (ஹி.ச) அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 அன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி மற்றும்
Crude Oil Prices Decline


வாஷிங்டன், 08 ஏப்ரல் (ஹி.ச)

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 அன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி மற்றும் அவருடன் பல ஈரான் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளவாடங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்த போர் ஒரு மாதங்களைக் கடந்தும் முடிவடையாமல் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்தச் சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் முன்னெடுத்த பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு வார காலத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பை ஈரானும் ஏற்றுக் கொண்டது. இதன் பின்னணியில் இரு தரப்பிலும் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது.

போர் பதற்றம் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை கடந்த மாதம் முதல்முறையாக ஒரு பீப்பாய் 100 டாலரைக் கடந்தது.

ஜி7 நாடுகள் தங்களின் அவசர கால கையிருப்பில் இருக்கும் எண்ணெய்களை வெளியிட்டதால், கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் குறைந்தது.

தற்காலிக போர் நிறுத்த எதிரொலியாக, கச்சா எண்ணெய்யின் விலை 15 சதவிகிதம் வரை சரிவைக் கண்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 7 மணியளவில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 13 சதவிகிதத்துக்கும் மேல் சரிந்து, ஒரு பீப்பாய் 94.94 டாலராக வர்த்தகமானது.

இதற்கிடையில், அமெரிக்க டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் விலை 14.60 சதவிகிதம் டாலர்கள் விலை சரிந்து ஒரு பீப்பாய் 96.46 டாலராகக் குறைந்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான போருக்கு முன்னதாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 62 முதல் 65 டாலர் வரை வர்த்தகமாகி வந்தது.

போரால் ஏற்பட்ட தட்டுப்பாட்டால், பீப்பாய்க்கு 119 டாலர் என்ற உச்சத்தை எட்டிய நிலையில், மீண்டும் 100 டாலருக்கு கீழே இறங்கி வர்த்தகமாகி வருகிறது.

கச்சா எண்ணெய் விலை குறைவால், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b