சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாடு, 08 ஏப்ரல் (ஹி.ச.) மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறு வரையறை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அண்மைக்காலமாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு தென்மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வரு
முதலமைச்சர்


தமிழ்நாடு, 08 ஏப்ரல் (ஹி.ச.)

மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறு வரையறை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அண்மைக்காலமாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதற்கு தென்மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. ஏனெனில் மக்கள் தொகை கட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளையும் தென் மாநிலங்கள் தீவிரமாக பின்பற்றி வருவதன் காரணமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் மக்கள் தொகையை வைத்து தொகுதிகளின் எண்ணிக்கை மறு வரையறை செய்தால் தென்மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என தலைவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக,முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள் எனவும் மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்! எனக் குறிப்பிட்டு சில கேள்விகளை அடுக்கி இருக்கிறார்.

அதன்படி, தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இரகசியம் காப்பது ஏன்?

2001-ஆம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமர் அவர்களின் பதில் என்ன?

5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்?

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன?

அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன?

எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா? உள்ளிட்ட கேள்விகளை முதலமைச்சர் எழுப்பியுள்ளார்.

தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்ற அவர், இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! தங்கள் அனுமதியின்றி, தங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம் எனவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P