Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 08 ஏப்ரல் (ஹி.ச)
அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 அன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி மற்றும் அவருடன் பல ஈரான் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளவாடங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்த போர் ஒரு மாதங்களைக் கடந்தும் முடிவடையாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எட்டப்பட்டுள்ள போர் நிறுத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம். நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததைப் போலவே, தற்போது நடைபெற்று வரும் மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர பதற்றத்தைத் தணித்தல், பேச்சுவார்த்தை நடத்துதல், ராஜதந்திர அணுகுமுறை ஆகியவை இன்றியமையாதவை.
இந்த மோதல் ஏற்கெனவே மக்களுக்கு அளவற்ற துயரத்தை ஏற்படுத்திவிட்டது. அதோடு, உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக சங்கிலிகளை சீர்குலைத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற கடல்வழிப் போக்குவரத்தும், உலகளாவிய வர்த்தக ஓட்டமும் தொடர்ந்து நிலவும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b