தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 2800 போலீசார் நியமனம் - புதுச்சேரி தேர்தல் அதிகாரி தகவல்
புதுச்சேரி, 08 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது, புதுச்சேரியில் வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 6 வரை நடக்கும். மொத்தம் 1099 வாக
2,800 Police


புதுச்சேரி, 08 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது,

புதுச்சேரியில் வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 6 வரை நடக்கும். மொத்தம் 1099 வாக்குச்சாவடிகள் உல்ளன. அதில் பதற்றமானவை 209. கிரிட்டிக்கல் 5 உள்ளன. தனித்துவத்தமான வாக்குச்சாவடிகள் புதுச்சேரி கலை, வரலாற்று அடிப்படையில் கீழூர், வஉசி பள்ளி, காரைக்கால் தந்தை பெரியார் பள்ளி வாக்குச்சாவடிகளாக அமைத்துள்ளோம்.

பெண்கள் 30 வாக்குச்சாவடிகளை நிர்வகிப்பர். புதிய அரசு ஊழியர்கள் 15 வாக்குச்சாவடிகளையும், மாற்றுத்திறனாளி அதிகாரிகள் 2 வாக்குச்சாவடிகளையும் நிர்வகிப்பார்கள். வாக்குப்பதிவு பணிகளில் 5 ஆயிரம் அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுவர். மாணவர் தன்னார்வலர்கள் 2200 பேர் ஈடுபடுவர்.

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளில் இருந்து வீல் சேர்களில் அழைத்து வந்து வாக்கு செலுத்த உதவுவது, மொபைல்போன் டெபாசிட் செய்து தருவது உள்ளிட்ட பணிகளை செய்வர். மைக்ரோ அப்சர்வர்கள் 173 பேரும், போலீஸார் 2800 பேரும் பணியில் ஈடுபடுவர்.

புதுச்சேரியில் ரூ. 77.25 லட்சம் பணம், மதுபானங்கள் ரூ. 65 லட்சம், போதைப்பொருட்கள் ரூ. 21 லட்சம், தங்கம், வெள்ளி போன்றவை ரூ. 6.71 கோடி என மொத்தம் ரூ. 8.4 கோடி பறிமுதல் செய்துள்ளோம். தெரியாத எண்ணிலிருந்து பணம் உங்கள் எண்ணுக்கு வந்தால் சிவிஜில் மூலம் புகார் தரலாம். கடந்த முறையை விட மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

கூடுதல் தொகை பறிமுதலாகியுள்ளது. புதுச்சேரி தேர்தலை பார்வையிட கிர்கிஸ்தான், மால்டோவா, மங்கோலியா, பூடான் உட்பட ஆறு வெளிநாடுகளில் இருந்து 9 உறுப்பினர்கள் புதுச்சேரி வந்துள்ளனர்.

இணையத்தளத்தில் தவறான தகவல் இருக்கிறதா என்பதை கண்காணித்து சைபர் கிரைம் மூலம் மெய்பொருள் திட்டம் மூலம் கண்டறிந்து தவறான 113 தகவல்கள் அடையாளம் காணப்பட்டுஎப்ஐஆர் பதிவானது.

மொத்தம் 9.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக 9 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் 9 பேர் மீது சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளோம். அவர்கள் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தம் 12,591 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது.

ட்ரோன் மூலம் 41 எப்ஐஆர் வழக்குகள் பதிவானது. கூட்டநெரிசல் உள்ளிட்ட வை 17ம், பணம் தந்தது தொடர்பாக 24 எப்ஐஆரும் பதிவானது. கடந்த முறை 82.2 சதவீத வாக்குகள் பதிவானது. இம்முறை எஸ்ஐஆர் மூலம் 8 சதவீத வாக்குகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

இம்முறை 90 சதவீதம் வரை எதிர்பார்க்கிறோம். முதல் முறை வாக்காளர்கள் 24,919 பேர் உள்ளனர். வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. அவர்கள் உடன் வாக்களிக்க தன்னார்வலர்கள் உதவுவர்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குச்சீட்டை பொருத்தும்போது, யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்றதால் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை கைது செய்துள்ளோம். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு முடிந்தவுடன் இரவு பத்து மணிக்குள் இயந்திரங்கள் வந்தடையும் என எதிர்பார்க்கிறோம்.

புதுச்சேரியில் 3 மையங்களும், காரைக்கால், மாஹே, ஏனாமில் தலா ஒரு மையங்களும் உள்ளன. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b