Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 08 ஏப்ரல் ( ஹி.ச)
புதுவை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல்08) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
புதுவை மாநிலத்தில் மொத்தம் 5.03 லட்சம் பெண்கள், 4.4 லட்சம் ஆண்கள் என்று மொத்தமாக 9 லட்சத்து 50 ஆயிரத்து 311 வாக்காளர்கள் உள்ளனர்.
புதுச்சேரி முழுவதும் 30 தொகுதிகளிலும் மொத்தம் 1099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் 34 தேசிய கட்சி வேட்பாளர்கள், 63 மாநிலக் கட்சி வேட்பாளர்கள், 80 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத வேட்பாளர்கள், 117 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
புதுவை பிராந்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் தாகூர் கலைக்கல்லுாரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி, மகளிர் பொறியியல் கல்லுாரி வளாகங்களில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்தது.
வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை சீல் இன்று காலை திறக்கப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் பிரிக்கப்பட்டது.
காலை 12 மணிக்கு இயந்திரங்கள் தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரித்து அனுப்பப்பட்டது.
இயந்திரங்களை கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இயந்திரங்களுடன் வாக்குப்பதிவுக்கு தேவையான மை, எழுது பொருட்கள் உட்பட தேவையான பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
புதுவை மாநிலத்தில் 30 தொகுதிகளுக்கு 1099 வாக்கு இயந்திரங்கள், ஆயிரத்து 99 கட்டுப்பாட்டு கருவிகள், ஆயிரத்து 99 விவிபாட் மிஷின்கள் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இது மட்டுமின்றி அவசர சூழ்நிலையை எதிர்கொள்ள 364 வாக்கு மிஷன், 364 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 459 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை கையிருப்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிகள் அனைத்திலும் துணை ராணுவத்தினர்,போலீஸார், தேர்தல் பணி அதிகாரிகள் பணிக்கு வந்திருந்தனர் இந்த வாக்குஇயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.
நாளை காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது.
இதன்பின் வாக்குபதிவு இயந்திரங்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்படுகிறது.
அங்கு தொகுதிவாியாக பிரிக்கப்பட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, பாதுகாப்பு அறை வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்படுகிறது.
24 மணி நேரமும் பாதுகாப்பு அறை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். வீடியோவும் பதிவு செய்யப்படும்.
துணை ராணுவத்தினர், புதுச்சேரி போலீஸார் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்படும்.
அடுத்த மாதம் 4-ம் தேதி புதுவை சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
Hindusthan Samachar / vidya.b