Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 08 ஏப்ரல் (ஹி.ச)
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.
இதற்காக மாநிலம் முழுவதும் 30 தொகுதிகளிலும் மொத்தம் ஆயிரத்து 99 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் 34 தேசிய கட்சி வேட்பாளர்கள், 63 மாநில கட்சி வேட்பாளர்கள், 80 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத வேட்பாளர்கள், 117 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
புதுவை பிராந்திய ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தாகூர் கலைக்கல்லுாரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி, மகளிர் பொறியியல் கல்லூரி வளாகங்களில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்தது.
வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை சீல் இன்று காலை திறக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் பிரிக்கப்பட்டது.
12 மணிக்கு எந்திரங்கள் தொகுதி வாரியாக ஓட்டுச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரித்து அனுப்பப்படுகிறது.
எந்திரங்களை கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எந்திரங்களுடன் ஓட்டுப்பதிவுக்கு தேவையான மை, எழுது பொருட்கள் உட்பட தேவையான பொருட்களும் அனுப்பி வைக்கப்படுகிறது.
புதுவை மாநிலத்தில் 30 தொகுதிகளுக்கு ஆயிரத்து 99 ஓட்டு மிஷின், ஆயிரத்து 99 கட்டுப்பாட்டு கருவிகள், ஆயிரத்து 99 விவிபாட் மிஷின்கள் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமின்றி அவசர சூழ்நிலையை எதிர்கொள்ள 364 ஓட்டு மிஷன், 364 கட்டுப்பாட்டு மிஷின், 459 விவிபாட் மிஷின் ஆகியவை கையிருப்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுச்சாவடிகள் அனைத்திலும் துணை ராணுவத்தினர்,போலீசார், தேர்தல் பணி அதிகாரிகள் பணிக்கு வந்திருந்தனர். இந்த ஓட்டுமிஷின்கள் அந்தந்த ஓட்டுச்சாவடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அனைத்து ஓட்டுச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.
நாளை காலை 7 மணிக்கு அனைத்து ஓட்டுச்சாவடியிலும் ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது. இதன்பின் ஓட்டுமிஷின்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்படுகிறது.
அங்கு தொகுதிவாரியாக பிரிக்கப்பட்டு மிஷின்கள் வைக்கப்பட்டு, பாதுகாப்பு அறை வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்படுகிறது.
24 மணி நேரமும் பாதுகாப்பு அறை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். வீடியோவும் பதிவு செய்யப்படும்.
துணை ராணுவத்தினர், மற்றும் புதுச்சேரி போலீசார் என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 4-ம் தேதி புதுவை சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு எண்ணிக்கை நடை பெறவுள்ளது.
Hindusthan Samachar / vidya.b