Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 08 ஏப்ரல் (ஹி.ச.)
ராணிப்பேட்டை சரகத்தில் பணியாற்றி வந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆகிய இருவரை லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்துள்ளது.
ஜிஎஸ்டி பதிவை எளிதாக்கித் தருவதற்காக கண்காணிப்பாளர் ஏல்லமில்லி ரிங்கேஷ், புகார்தாரரிடம் முதலில் ரூ.30,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அந்த தொகையை ரூ.15,000 ஆக குறைத்து வாங்க ஒப்பந்தம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், ஏப்ரல் 7ஆம் தேதி சிபிஐ வழக்குப் பதிவு செய்து, அதே நாளில் பொறி வைத்து கண்காணிப்பு மேற்கொண்டது. புகார்தாரரிடமிருந்து ரூ.15,000 லஞ்சத் தொகையை பெற்றுக் கொண்டபோது, கண்காணிப்பாளர் கையும் களவுமாக சிக்கினார்.
இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், இந்த லஞ்ச விவகாரத்தில் ஜிஎஸ்டி ஆய்வாளர் ராம்கேஷ் மீனாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
சிபிஐ அதிகாரிகள் வருவதை உணர்ந்த அவர், லஞ்சப் பணத்தை வெஸ்டர்ன் கழிப்பறைத் தொட்டியில் வீசி நீரால் அடித்து மறைக்க முயன்றார்.
ஆனால், சிபிஐ அதிகாரிகள் அந்த பணத்தை மீட்டனர். இதனைத் தொடர்ந்து, கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ