Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தமிழனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், சைதாப்பேட்டை வேட்பாளர் செந்தமிழன் வேறு கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் எனது இனிய நண்பர். தொகுதி மக்களுக்கு நல்லது செய்யக் கூடிய பண்பு படைத்தவர் செந்தமிழன். அவருக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே தவறான அவதூறு பிரச்சாரத்தை செய்து வருகிறார். அதிமுக கூட்டணி இயற்கையான கூட்டணி. திமுக அரசை கடந்த நான்கரை ஆண்டுகளாக கூட்டணி கட்சியினர் தாங்கிப் பிடித்துள்ளனர். சட்டமன்றத்தில் திமுக செய்த தவறை அவர்கள் சுட்டிக்காட்டியது இல்லை.
திமுக கூட்டணியில் கூட்டணி கட்சியினருக்கு குறைவான சட்டமன்றத் தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. ஆனால் அதிமுக அவ்வாறு கிடையாது; அதிமுக வேட்பாளரைக் காட்டிலும் அதிமுக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்ய 10 மடங்கு உழைப்போம். காங்கிரஸும், திமுகவும் கூட்டணி அமைக்க 20 நாட்கள் போராடினார். அவர்கள் கூட்டணியில் கருத்து வேறுபாடு இருப்பது வெளிப்படையாக தெரிய வந்தது. அவர்கள் மனமுவந்து கூட்டணியில் சேரவில்லை. மனவருத்தத்துடன் கூட்டணியில் இணைந்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையாக விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் பொதுமக்கள் போராட்டமான வாழ்விற்கு தள்ளப்பட்டுள்ளனர். சட்டம்- ஒழுங்கு தரம் கெட்டுள்ளது. சிறுமிகள், முதியோர்கள், பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. திமுகவை பொறுத்தவரை குற்றவாளிகளைக் காப்பாற்றுவதுதான் அவர்களது எண்ணம். அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அதிமுக ஆட்சிக்கு வந்தால் யார் அந்த சார்? என்பதை நிச்சயம் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.
அதிமுக ஆட்சியில் சென்னை மாநகரத்தில், ஜய்கா உதவியுடன் வடிகால் வசதிகள் செய்து தரப்பட்டது. இதில் 1040 கிலோமீட்டர் தொலைவிற்கு வடிகால் வசதிகள் செய்து தரப்பட்டது. ஆக்கிவைத்த சாப்பாட்டை சாப்பிடுவது போல், திமுக, அதிமுக திட்டங்களை நிறைவேற்றுகிறது. மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவிகிதம் முடிந்துள்ளதாக மாநகராட்சி மேயரும், மழை பெய்தால் ஒரு சொட்டு மழைநீர்கூட தேங்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியமும் கூறுகின்றனர். அத்தனையும் பொய்.
கமிஷனுக்காக இந்த அரசு திட்டமிட்டு வடிகால் பணிகளை ஆமை வேகத்தில் நடத்தினர். இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தரமான வடிகால் வசதிகள் செய்து தரப்படவில்லை. அதிமுக ஆட்சியில் வடிகால் பணிகளில் முதலீடு செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் சென்னை கூவம் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள 17,750 குடும்பங்கள், பாதுகாப்பான இடத்திற்கு குடியமர்த்தப்படுவர். சென்னையில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்படாமல் இருந்த கால்வாய்கள் அதிமுக ஆட்சியில் தூர்வாரப்பட்டது. சென்னையில் பெய்யும் மழைநீர் காலவாய்களில் முழுவதுமாக வடியும் சூழலை உருவாக்கியது அதிமுக ஆட்சி.
சைதாப்பேட்டையில் அரசு ஊழியர்களுக்கான வாடகை குடியிருப்புகள் கட்டப்பட்டு இதுவரை அவர்கள் குடியமர்த்தப்படவில்லை. திமுக வெளியிட்டுள்ள அறிவிப்புகளில் நான்கில் ஒரு பங்கைத்தான் நிறைவேற்றி உள்ளனர். கல்விக்கடன் ரத்து செய்யப்படவில்லை; கேஸ் மானியம் வழங்கப்படவில்லை; பெட்ரோல், டீசல் விலை குறைக்கவில்லை; ரேஷன் கடைகளில் கூடுதலாக சர்க்கரை ஒரு கிலோ தருவதாகக் கூறினர். அவ்வளவு மோசமான கீழ் தரமான ஆட்சி தமிழ்நாட்டில் பார்க்க முடிகிறது.
எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை; கஞ்சா விற்பவர்களுக்கு துணை நிற்கிறது திமுக அரசு. அதிமுக ஆட்சிக்கு வந்த பின் மூன்றே வாரத்தில் நகரம் முதல் கிராமம் வரை கஞ்சா அறவே ஒழிக்கப்படும். திமுக ஆட்சியில் அனைத்திற்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் குப்பைக்கும் வரிப்போட்ட ஒரே அரசு திமுக அரசு தான். கழிப்பிட பராமரிப்புக்கான டெண்டர் விடப்பட்டதில், அதிலும் கூட கமிஷன் அடித்த ஒரே கட்சி திமுக.
கருணாநிதியின் குடும்ப அரசியல், வாரிசு அரசியல் நாட்டிற்கு தேவையா?, வரும் தேர்தலில் குடும்ப ஆட்சிக்கும், வாரிசு அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பீர்களா? மக்களைக் காப்போம், தமிழ்நாட்டை மீட்போம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Hindusthan Samachar / ANANDHAN