Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 08 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் (172) திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் ஷாஜகான், ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருத்துவக்குடி கிராமத்தில், நேற்று அவர் வாக்கு சேகரிக்கச் சென்றார்.
அப்போது அங்கிருந்த கரும்பு விவசாயிகள் கடந்த 1,225 நாட்களாக திருமண்டக்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலைகள் நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூபாய் 212 கோடியை வழங்கவில்லை.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆட்சியில் தமிழ்நாடு அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் இதுகுறித்து கோரிக்கை மனுவை பாபநாசம், கபிஸ்தலம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அளிக்க சென்றபோது, 10க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளை வழியிலேயே தடுத்து நிறுத்திய போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கரும்பு விவசாயிகள், தங்களை போலீசார் கைது செய்தபோதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயலை கண்டித்து, இனி எங்கள் பகுதியில் திமுகவினர் யாரும் வாக்கு சேகரிக்க வரக்கூடாது எனக் கூறி, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஷாஜகானை இடைமறித்தனர்.
அப்போது திமுகவினருக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்த கபிஸ்தலம் போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் வேட்பாளர் ஷாஜகான் தனது வாகனத்தை நிறுத்தாமல் புறப்பட்டுச் சென்றார்.
கரும்பு விவசாயிகள் மற்றும் திமுக நிர்வாகிகளிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Hindusthan Samachar / ANANDHAN