Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 08 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வாகன தணிக்கைகள் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மனோரா கார்னர் ரவுண்டானா பகுதியில் நகர போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் ராஜா என தெரியவந்தது.
அவரிடம் மேற்கொண்ட சோதனையில், வாகனத்தில் ரூ.5,77,000 பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அந்த பணம் எதற்காக கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான ஆவணங்களை போலீசார் கேட்டபோது, அவர் எந்தவிதமான முறையான ஆவணங்களையும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளின்படி அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் பின்னர் பறக்கும் படை அதிகாரி சுதாகர் ராஜ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணம் எதற்காக கொண்டு செல்லப்பட்டது, அதன் பின்னணியில் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகள் உள்ளனவா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தேர்தல் காலத்தில் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது தேவையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அதிகாரிகள் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN