திருப்பரங்குன்றம் விவகாரம்- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை!
மதுரை, 08 ஏப்ரல் (ஹி.ச.) திருப்பரங்குன்றம் மலையில், தர்கா அருகே உள்ள தீபத்தூணில் கார்த்திகை திருநாளில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த ஆண்டு உத்தரவிட்டார். ஆனால், அரசு அதிகாரிகள் தீர்ப்பு தொடர
Madurai High Court


மதுரை, 08 ஏப்ரல் (ஹி.ச.)

திருப்பரங்குன்றம் மலையில், தர்கா அருகே உள்ள தீபத்தூணில் கார்த்திகை திருநாளில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.

ஆனால், அரசு அதிகாரிகள் தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதால், தீபம் ஏற்ற முடியாது என மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை நிறைவேற்றவில்லை எனக்கூறி மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அரசு அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனி நீதிபதி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, தீபத்தூண் போன்று வடிவமைக்கப்பட்ட தூணில் தீபம் ஏற்றுகிறார்.

இது வழக்கின் பொருளோடு நீதிபதி இணைந்துள்ளார் என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. மேலும், தீபம் ஏற்றும் வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவு சட்டவிரோதமாக உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,

இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. இதில் அவசரம் காட்ட முடியாது. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம். இது சிறிய பிரச்சனை, ஆனால் ஊதி பெரிய பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது.

இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த பின் தனி நீதிபதி உத்தரவை மிகைப்படுத்துவது ஏன்? யாரும் நீதிமன்றத்தில் குரலை உயர்த்தி நீதிமன்றத்தை மிரட்டும் நோக்கில் பேச வேண்டாம். இது சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்கப்படும் என்றனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரண்டு நீதிபதிகள் அமர்வு தடை விதித்த பின்பும், தனி நீதிபதி தொடர்ந்து இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வந்துவிட்ட பிறகு, தனி நீதிபதி விசாரிக்க முடியாது. அது தானாக இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வந்துவிடும். இதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரிப்பாரா? அல்லது இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்குமா? என்பது குறித்து நீதிமன்றம் விசாரணை செய்து உரிய முடிவு எடுக்கும். அதுவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதியின் அனைத்து உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்றனர்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN