Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 08 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் சித்திரை மாதம் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு மாவட்டங்களிலும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நேற்று மட்டும் 12 இடங்களில் வெயில் சதமடித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி ஃபாரன்ஹீட்டும், அதற்கு அடுத்தபடியாக கரூர் பரமத்தி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட இடங்களிலும் வெயில் சுட்டெரித்தது.
இதே போன்று, திருச்சி, திருத்தணி, மதுரை, பாளையங்கோட்டை, மதுரை விமான நிலையம், சேலம் ஆகிய இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கு மேல் வெயில் பதிவானது.
இதனால் அன்றாட பணிகளை மேற்கொள்ளும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனிடையே, தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் இன்று மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P