Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 08 ஏப்ரல் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா நேற்று நடைபெற்றது.
இந்த திருவிழாவின்போது சவ்வாஸ்புரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும்
மாங்குளத்தை சேர்ந்த மாரிக்கண்ணன் என்ற இரு இளைஞர்கள் கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் பெரிய வாளுடன் சுற்றி திரிந்துள்ளனர்.
இதனைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த பஞ்சாலை தொழிலாளியான வேல்முருகன்(33) என்பவர் கோவில் விழா கமிட்டி உறுப்பினராக இருந்ததால் கையில் வாளுடன் சுற்றித்திரிந்த கருப்பசாமி மற்றும் மாரி கண்ணன் இருவரையும் தட்டி கேட்டு சத்தம் போட்டு உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் உன்னை வெட்டிக் கொள்ளாமல் விடமாட்டோம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து விழா முடிந்து இன்று அதிகாலை நேரத்தில் ராமலிங்காமில் அருகே உள்ள டீக்கடையில் வேல்முருகன் நண்பர்களுடன் வந்து டீ குடித்து விட்டு மீண்டும்
சவ்வாஸ்புரம் திரும்பி உள்ளார்.
அப்போது சவ்வாஸ்புரம் தொடக்கக்வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு இருளில் மறைந்திருந்த கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணன் இருவரும் தாங்கள் வைத்திருந்த
வாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டி உள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில்
துடிதுடித்து வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி திருச்சுழி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில், வேல்முருகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த நபர்களை உடனடியாக
கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் அருப்புக்கோட்டை - சாயல்குடி
சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசாரின் பேச்சு வார்த்தையை ஏற்காமல் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடை பெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த
அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் மாரிமுத்து போராட்டம் நடத்தியவர்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும்,
சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி
அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு
கலைந்து சென்றனர்.
சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக
அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
திருச்சுழி காவல் நிலைய போலீசார் தலைமறைவாக உள்ள கருப்பசாமி மற்றும்
மாரிக்கண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam