3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் கோரிய வழக்கில் தலையிட முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச.) அரசுத் துறைகளில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களை கட்டாய இடமாற்றம் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த மணப்பாறை தாலுக்கா ம
High court


சென்னை, 09 ஏப்ரல் (ஹி.ச.)

அரசுத் துறைகளில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களை கட்டாய இடமாற்றம் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஒருங்கிணைந்த மணப்பாறை தாலுக்கா மானவாரி மற்றும் இறவை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், அரசு அலுவலகங்களில் நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்கள் காரணமாக நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை குறைகிறது என்றும், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்றும் வாதிடப்பட்டது.

எனவே, 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோருக்கு கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டனர்.

இதனால், இந்த கட்டத்தில் நீதிமன்றம் தனியாக கூடுதல் உத்தரவு பிறப்பிக்க இயலாது என தெரிவித்தனர்.

மேலும், அரசு ஊழியர்களின் இடமாற்றம் என்பது நிர்வாகத் தீர்மானம் மற்றும் பணி தொடர்பான விவகாரம் என்பதால், இதை பொதுநல வழக்காக (PIL) கருதி விசாரிக்க முடியாது என்றும் நீதிமன்றம் விளக்கம் அளித்தது.

இதனையடுத்து, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என கூறி, வழக்கில் தலையீடு செய்ய மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவு, அரசு ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பான கொள்கை முடிவுகளில் நீதிமன்ற தலையீடு எவ்வளவு வரையறுக்கப்படுகிறது என்பதை மீண்டும் வலியுறுத்துவதாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ