Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 ஏப்ரல் (ஹி ச)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து,
எக்ஸ் சமூக வலைதளத்தில் விரிவான கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
அதில்,மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நாடாளுமன்றத்தின் அடிப்படை அமைப்பையே திட்டமிட்டு சீர்குலைக்க முயல்கிறது என அவர் குற்றம்சாட்டினார்.
விவாதங்களுக்கும், பொறுப்பிலுள்ளவர்கள் பதில் கூறுவதற்குமான தளமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றம், தற்போது உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மற்றும் மாநில மக்களின் பிரச்சினைகளை முன்வைக்க கூட போதிய நேரமளிக்காத வெற்று சம்பிரதாய அவையாக மாறிவருகிறது என அவர் தெரிவித்தார்.
“தொகுதி மறுவரையறை” என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சி, “குறைந்தபட்ச அரசு – அதிகபட்ச நிர்வாகம்” என்ற மத்திய அரசின் சொந்த முழக்கத்திற்கே எதிரானது என்றும், இதனால் செலவுகள் அதிகரித்து மக்களின் வரிப்பணம் வீணாகும் அபாயம் இருப்பதாகவும் கூறினார்.
மேலும், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமாக வரையறுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானதாக இந்த நடவடிக்கை அமைவதாகவும், மாநிலங்களின் கருத்துகளை புறக்கணித்து முறையான ஆலோசனை இல்லாமல் செயல்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கை வடமாநிலங்களுக்கு அரசியல் பலம் சேர்க்கும் வகையில் அமைந்து, தென்மாநிலங்களின் குரலை ஒடுக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக இது அமையும் எனவும் அவர் விமர்சித்தார்.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்த ராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் முன்வைத்துள்ள அச்சங்களை மேற்கோள் காட்டி, கூட்டாட்சி அமைப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாக கூறிய முதல்வர், தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்காமல் தற்போதைய அமைப்பிலேயே அதை அமல்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள், OBC பிரிவினருக்கான “கிரீமி லேயர்” வரம்பு, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மொத்தத்தில், இந்த நடவடிக்கை கூட்டாட்சியை பலவீனப்படுத்தி அதிகாரத்தை மையப்படுத்தும் முயற்சியாகும் என்றும், மாநிலங்களின் நலன்களுக்கு எதிரானதாகும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ