கோவை சிறுவாணி அணையில் தண்ணீர் எடுக்கும் அளவு குறைப்பு
கோவை, 09 ஏப்ரல் (ஹி.ச.) சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவு குறைக்கப்பட்டு உள்ளதால், கோவை மாநகராட்சிக்கு நாள்தோறும் 33.5 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக அதிகாரி தெரிவித்தார். கோவை மாநகரில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொத
Siruvani Dam


கோவை, 09 ஏப்ரல் (ஹி.ச.)

சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவு குறைக்கப்பட்டு உள்ளதால், கோவை மாநகராட்சிக்கு நாள்தோறும் 33.5 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக அதிகாரி தெரிவித்தார்.

கோவை மாநகரில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி, பில்லூர் 1, 2 மற்றும் 3 குடிநீர் திட்டம், வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு வருகின்றன.

அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் அதில் எடுக்கப்படும் குடிநீர் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் ஒரே மாதிரி சீரான இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை, ஒரு சில இடங்களில் வாரம் ஒரு முறையும், சில இடங்களில் மூன்று நாட்களுக்கு ஒரு முறையும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால், அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவு பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனை ஈடு செய்ய பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து கூடுதல் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது கோவை மாநகரில் நாளொன்றுக்கு 33.5 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது :

கோவை மாநகரில் அனைத்து பகுதிகளிலும் குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து வகை நீர் ஆதாரங்களின் மூலம் தினமும் 330 எம்.எல்.டி (ஒரு எம் எல் டி என்பது 10 லட்சம் லிட்டர்) எடுக்கப்படுகிறது. இவை 100 வார்டுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கோடை காலம் நெருங்குவதால் சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு குறைந்து உள்ளது. அதை ஈடுகட்ட பில்லூர் திட்டத்தில் இருந்து கூடுதல் குடிநீர் பெறப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை, இருப்பினும் கோடை காலம் என்பதால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல், சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும் போது;

50 அடி உயரம் கொண்ட சிறுவாணி தற்பொழுது 16.3 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனால் இங்கு குடிநீர் எடுக்கப்படும் அளவு 100 எம்.எல்.டி யில் இருந்து 47.5 எம்.எஸ்.டி யாக குறைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக கோடை காலம் தொடங்கும் சூழலில், அணையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்படும் அதன்படி கடந்த இரு வாரங்களாக சிறுவாணி அணையில் இருந்து சராசரியாக 45 முதல் 50 எம்.எல்.டி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்த சில வாரங்களுக்கும் இதே அளவுக்கு குடிநீர் அளவுக்கு தான் குடிநீர் எடுக்கப்படும் என்றும் கூறினர்.

Hindusthan Samachar / ANANDHAN