ஐபிஎல்லில் மெகா மாற்றம்- வைபவ் சூர்யவன்ஷி அணி மாறப்போகிறரா?
புதுடெல்லி, 09 ஏப்ரல் (ஹி.ச.) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, இளம் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பதில் எப்போதுமே பெயர் பெற்றது. சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோர் வரிசையில், அந்த அணியின் சமீபத்திய கண்டுபிடிப்பு 15 வயதான வைபவ
வைபவ் சூர்யவன்ஷி


புதுடெல்லி, 09 ஏப்ரல் (ஹி.ச.)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, இளம் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பதில் எப்போதுமே பெயர் பெற்றது.

சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோர் வரிசையில், அந்த அணியின் சமீபத்திய கண்டுபிடிப்பு 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி தான் இப்போது சென்சேஷன்.

நேற்று முன்தினம் இரவு, ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான 11 ஓவர் போட்டியில் வெறும் 14 பந்துகளில் 39 ரன்கள் குவித்து, தான் திறமையானவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் வைபவ். மும்பைக்கு எதிரான போட்டியில் உலகின் நம்பர் 1 பௌலரான பும்ராவின் ஓவரில் முதல் பந்தையே அசால்ட்டாக சிக்ஸர் அடித்தார்.

பும்ராவின் ஒரு ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அசால்ட்டாக பறக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷியின் அசாத்திய பேட்டிங் திறமை நேற்றைய வைரல். இதற்கிடையில், வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடப் போகிறார் என்ற தகவல் பரவி வருகின்றன.

இதற்கு விதை போட்டவர், முன்னாள் தேர்வாளர் மற்றும் கிரிக்கெட் வீரருமான ஜதின் பரஞ்ச்பே. இதுதொடர்பாக ஜதின் பரஞ்ச்பே எக்ஸ் தளத்தில் பதிவு எழுதியபோதுதான் இந்த விவாதம் தொடங்கியது. அவர் தனது பதிவில், வைபவ் சூர்யவன்ஷி இன்று இரவு தனது எதிர்கால அணிக்கு எதிராக விளையாடுவார் என்று எழுதியிருந்தார்.

அதாவது, வைபவ் விரைவில் மும்பை அணிக்காக விளையாடுவதைக் காணலாம் என்று கூறியிருந்தார்.

ஜதின் பரஞ்ச்பே கூறியதற்கேற்ப ராஜஸ்தான் ராயல்ஸ் வைபவ் சூர்யவன்ஷி விஷயத்தில் அதே தவறை மீண்டும் செய்யுமா? இதனை புரிந்துகொள்ள ராஜஸ்தான் ராயல்ஸின் பாணியை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். முன்பே சொன்னது போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, இளம் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பதில் எப்போதுமே பெயர் பெற்றது.

ஆனால் அவர்களை தக்கவைப்பதில் அப்படியான வரலாறு இல்லை. ராஜஸ்தான் அணி, தங்களது இளம் வீரர்கள் பெரிய நட்சத்திரங்களாக ஆன பிறகு, அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளாமல் விடுவிக்கிறது. ஜோஸ் பட்லரை அணியிலிருந்து விடுவித்த அவர்களின் முடிவு இன்னும் ஆச்சரியமளிக்கிறது. சஞ்சு சாம்சனின் வெளியேற்றம் இதற்குச் சமீபத்திய உதாரணம்.

மாறிக்கொண்டிருக்கும் ஐபிஎல் சூழலில், பெரிய வீரர்களை ஒப்பந்தம் செய்வதை எப்போதும் விரும்பும் மும்பை இந்தியன்ஸ் அணி ஜதின் பரஞ்ச்பே சொன்னது போல் விரைவில் வைபவ் சூர்யவன்ஷி மீது ஆர்வம் காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி நடந்தால், அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தாராளமாகப் பணம் கொடுக்கத் தயாராக இருக்கும். 2025 மெகா ஏலத்தில் ராஜஸ்தான் அணி வைபவ் சூர்யவன்ஷியை வெறும் ரூ. 1.10 கோடிக்கு வாங்கியது. இந்த விலை அவரது திறமைக்கு மிகக்குறைவு என வெளிப்படையாகவே ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

இன்று வைபவ் சூர்யவன்ஷி ஏலத்திற்கு வந்தால், அவர் ரிஷப் பந்தை முந்தி ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையைப் பெற வாய்ப்புண்டு. மேலும், அவர் ரூ. 30 கோடி ஏலம் போகவும் வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், 2027 மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சந்தேகமின்றி அவர் மீது ஆர்வம் காட்டும்.

எது எப்படியோ பரிமாற்றம் மூலமாகவோ அல்லது ஏலம் மூலமாகவோ, சூர்யவன்ஷி விரைவில் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் பணக்கார வீரராக மாறக்கூடும்.

Hindusthan Samachar / GOKILA arumugam