மதுரை அருகே தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
மதுரை, 09 ஏப்ரல் (ஹி.ச.) மதுரை கருப்பாயூரணி அருகே ஓடைப்பட்டியைச் சேர்ந்த சின்ன கருப்பையா என்பவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சம்பத்குமார் புறம்போக்கு நிலங
ஆயுள் தண்டனை


மதுரை, 09 ஏப்ரல் (ஹி.ச.)

மதுரை கருப்பாயூரணி அருகே ஓடைப்பட்டியைச் சேர்ந்த சின்ன கருப்பையா என்பவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்.

இவர் கடந்த 2015ஆம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சம்பத்குமார் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரால் ஆத்திரமடைந்த சம்பத்குமார் மற்றும் அவரது தரப்பினர், சின்ன கருப்பையாவை பழிவாங்க திட்டமிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, 2016ஆம் ஆண்டு சம்பத்குமார், சேஷன், பரமசிவம், சேகர், ராம்குமார், பூமிநாதன் ஆகியோர் சேர்ந்து ஆயுதங்களால் தாக்கி சின்ன கருப்பையாவை கொலை செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கருப்பாயூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்டவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், வழக்கு மதுரை மாவட்ட தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

விசாரணை நடைபெறும் போது, குற்றம் சாட்டப்பட்ட சேஷன் இறந்துவிட்டார். மீதமுள்ள குற்றவாளிகளுக்கு எதிராக அரசு தரப்பு வலுவான ஆதாரங்களை முன்வைத்து அதிகபட்ச தண்டனை கோரியது.

இந்நிலையில் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி தாமோதரன், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் சம்பத்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் தாவேக சார்பில் போட்டியிடும் கல்லானையின் மாமா சம்பத்குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P