திரிணமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தை அதலபாதாளத்துக்கு இழுத்துச் செல்கிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
கிழக்கு மேதினிபூர், 09 ஏப்ரல் (ஹி.ச.) மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மேதினிபூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, மேற்கு
PM Modi alleges.


கிழக்கு மேதினிபூர், 09 ஏப்ரல் (ஹி.ச.)

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மேதினிபூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது,

மேற்கு வங்கத்தில் நடைபெறும் இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. இது வங்கத்தின் பெருமையை மீட்டெடுப்பதற்கானத் தேர்தல். வளர்ந்த வங்கத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான தேர்தல்.

இதற்கான முக்கிய நடவடிக்கையாக இந்த இரக்கமற்ற அரசாங்கம் ஆட்சியில் இருந்து அகற்றப்படுவது அமையும். இன்று இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது.

நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்கள் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், திரிணமூல் காங்கிரசின் இரக்கமற்ற அரசாங்கம் வங்கத்தை அதலபாதாளத்துக்கு இழுத்துச் செல்கிறது.

இதன் காரணமாக இளைஞர்கள் வெளிமாநிலங்களை நோக்கிச் செல்கின்றனர்.

திரணமூல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் உண்மையாகவே செழித்து வளர்ந்த ஒரே விஷயம் ஊடுருவல் மட்டுமே. ஊடுருவல்காரர்களுக்கான போலி ஆவணங்களைத் தயாரிப்பதிலும், கால்நடை கடத்தலில் ஈடுபடுவதிலும் மட்டுமே திரிணமூல் காங்கிரஸ் கவனம் செலுத்துகிறது.

திரிணமூல் காங்கிரஸின் அரசியல் முழுவதுமே அச்சத்தை அடிப்படையாகக் கொண்டது.

மேற்கு வங்கத்தில் மீன்களுக்கான தேவை மிக அதிகமாக இருந்தபோதிலும், மீன் உற்பத்தியில் இந்த மாநிலம் இன்னும் சுயசார்பு நிலையை எட்டவில்லை. பிற மாநிலங்களிலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திலேயே மேற்கு வங்கம் உள்ளது. பதினைந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகும், மீன் போன்ற ஒரு அடிப்படைத் தேவையைக்கூட உங்களுக்கு வழங்கத் திரிணாமுல் காங்கிரஸால் முடியவில்லை.

திரிணமூல் காங்கிரஸின் தவறான கொள்கைகளுக்கு இது ஒரு மிகத் தெளிவான எடுத்துக்காட்டு. கடந்த 11 ஆண்டுகளில், இந்தியாவின் ஒட்டுமொத்த மீன் உற்பத்தி இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதியும் இருமடங்காகப் பெருகியுள்ளது.

ஆனாலும், நாட்டின் பிற பகுதிகளில் வெற்றிகரமாக எட்டப்பட்ட வளர்ச்சி இங்கு மட்டும் சாத்தியமாகாமல் போய்விட்டது.

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு பாஜக ஆறு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறது. இவை பிரதமர் மோடியின் உத்தரவாதங்களாகும்.

முதல் உத்தரவாதம், பாஜக ஆட்சி அமைந்ததும், தற்போது நிலவும் அச்சம் நிறைந்த சூழலை அகற்றி, அதற்குப் பதிலாக நம்பிக்கையை நிலைநாட்டும். சட்டத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கையை நாங்கள் மீட்டெடுப்போம்.

இரண்டாவது உத்தரவாதம், அரசு நிர்வாக இயந்திரம் மக்களுக்கு சேவை செய்வதாகவும், பொறுப்புள்ளதாகவும், பதில் சொல்லக் கடமைப்பட்டதாகவும் மாற்றப்படும்.

மூன்றாவது உத்தரவாதத்தின்படி, திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒவ்வொரு ஊழல் குறித்தும், ஒவ்வொரு முறைகேடு குறித்தும், பெண்களுக்கு இழைக்கப்பட்ட ஒவ்வொரு அநீதி குறித்தும், ஒவ்வொரு பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்தும் மீண்டும் விசாரிக்கப்படும்.

நான்காவது உத்தரவாதத்தின்படி, திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ், ஊழலில் ஈடுபட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். அமைச்சராக இருந்தாலும் சரி அல்லது ஒரு காவலாளியாக இருந்தாலும் சரி இனி சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது.

ஐந்தாவது உத்தரவாதத்தின்படி, அகதிகளுக்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள அனைத்து உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்படும். அதேநேரத்தில், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள். அவர்கள் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஆறாவது உத்தரவாதத்துக்கு இணங்க, இங்கு பாஜக அரசாங்கம் அமைக்கப்பட்ட மறுகணமே, நாங்கள் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்தத் தொடங்குவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b