ஆட்சியமைக்கும் அளவுக்கு தேர்தலில் வெல்வோம் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.) புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்றது. தனது தொகுதியில் வாக்களித்த பிறகு முதல்வர் ரங்கசாமி தொகுதி வாரியாக சென்று பார்வையிட்டு அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
Puducherry Chief Minister Rangasamy


புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.)

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்றது. தனது தொகுதியில் வாக்களித்த பிறகு முதல்வர் ரங்கசாமி தொகுதி வாரியாக சென்று பார்வையிட்டு அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து மங்கலம் தொகுதியில் டீக்கடைக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி டீ மற்றும் அதிரசம் சாப்பிட்டுக் கொண்டே பொதுமக்களிடம் பேசினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கலந்துரையாடினார்.

வாக்குப் பதிவு அதிகரித்துள்ளது யாருக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது,

மக்கள் விழிப்புணர்வுடன் அதிகளவில் வாக்களிக்கின்றனர். மக்கள் நலத் திட்டங்கள் அவர்களுக்கு சென்றடைந்துள்ளதும் ஒரு காரணம். நாங்கள் ஆட்சிக்கு திரும்ப வர வேண்டும் என்றுதான் வாக்களிக்கிறார்கள்.

கிராமத்தில் விழிப்புணர்வு அதிகம் இருக்கும். கிராமங்களில் வாக்களிப்பு அதிகமாக உள்ளதும் இதற்கு ஒரு காரணம் என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.

நீங்கள் பிரச்சாரத்துக்கு வந்தபோது கிராமத்தில் தானே உங்களிடம் அதிகம் கேள்வி கேட்டார்கள் என்று கேட்டதற்கு,

ஆமாம். நான் செய்வதால் என்னிடம் கேட்டார்கள். கடந்த மக்களவைத் தேர்தலின்போது ரேஷன் கடைகளை திறந்து அரிசி, கோதுமை கேட்டார்கள், நானும் ரேஷன் திறந்து இலவச அரிசி, கோதுமை தந்தேன். தற்போதும் தங்கள் தேவைகளை என்னிடம் கேட்டார்கள். நான் செய்வேன் என்பதும் அவர்களுக்கு தெரியும் என்று முதல்வர் கூறினார்.

இம்முறை எத்தனை இடங்கள் வெல்வீர்கள் என்ற கேள்விக்கு, ஆட்சியமைக்கும் அளவுக்கு தேர்தலில் வெல்வோம் என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.

நிதிஷ் குமாரின் நிலைதான் உங்களுக்கு ஏற்படும் என்கிறார்களே என்று எதிர்க்கட்சியினர் கூறுவது குறித்த கேள்விக்கு,

அதுபோன்ற நிலை ஏற்படாது. என் தலைமையில் ஆட்சி அமையும் என்று சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதைச் செய்வார்கள். மத்திய அரசு உடன் இணக்கமாக இருந்து பல திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம் என்று முதல்வர் கூறினார்.

கூட்டணிக் கட்சி தொகுதிகளுக்கு ஏன் பிரச்சாரம் செல்லவில்லை என்ற கேள்விக்கு,

கூட்டணிக் கட்சியில் பெரியத் தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வந்தார்கள். நான்தான் என் கட்சிக்கு பிரச்சாரத்து செல்ல வேண்டும். நாட்களும் குறைவாக இருந்தது.

ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்துதான் நாங்கள் அனைவரும் பிரச்சாரம் செய்தோம் என்று ரங்கசாமி கூறினார்.

Hindusthan Samachar / vidya.b