Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 09 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சுமார் 0.9 கிமீ உயரத்தில், ஒடிசா முதல் மன்னார் வளைகுடா வரை தெலங்கானா, ராயலசீமா, உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை, நாளை மறுநாள் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் வரும் 12ம் தேதி ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. வரும் 12, 13 ஆகிய தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P